தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.  கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் தொகுதியில் நேரடியாகவே களமிறங்கி மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றினார். இதனால், தொகுதி மக்களிடம் நீங்கா இடம் பிடித்துவிட்டார் உதயநிதி. தொடர்ந்து அவர், மக்கள் பணி, கட்சிப் பணியை செய்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவிற்கு பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், முன்னணி அரசியல்வாதிகள் என அனைவருக்கும் அரசு சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.  இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமானம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பாமக தரப்பில் ஜி.கே மணி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஆ.ராசா, அமைச்சர் ஐ.பெரியசாமி, பொன்முடி, விசிக சார்பில் சிந்தனை செல்வன், அமைச்சர் ஏ.வ வேலு, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, நிதியமைச்சர் பி.டி.ஆர், மேயர் பிரியா வருகை ஆகியோர் வருகை தந்தனர்.  

 உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். “உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் உரிமையையும் நிலை நிறுத்துவேன் என்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்புமின்றி விருப்பு வெறுப்பை விளக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன் என்றார்.

மீண்டும் அவர், “உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் தமிழ்நாட்டின் அமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாகும் தெரிய வருவதுமான எந்த பொருளையும் அமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் உளமாற உறுதிமொழிகிறேன்” என்றார். இதையடுத்து, அமைச்சராக உதயநிதி கையெழுத்துப்போட்டார். அவருக்கு ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். இந்த பதவியேற்பு விழாவில் அனைத்து அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி, முதல்வரின் உறவினர்கள் பங்கேற்றனர். இந்த விழா 10 நிமிடங்களில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

By Divya