நாளை அமைச்சராகப் போகும் உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது ‘கடவுள் மறுப்பு’ பற்றி பேசினாலும், முழுக்க முழுக்க முருகனையும், ஜாதகத்தையும் நம்பியே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆள்வார்கள் என்று சொலவடை உண்டு. முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில் தொடங்கும் எந்த ஒரு நற்காரியமும் வெற்றியைத் தேடித்தரும் என்று சொல்வார்கள். பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமையில் குரு பகவான் ஆசியுடன் கூடிய குரு ஹோரையில் அமைச்சராக பதவியேற்கப் போகிறார் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினின் ஜாதகப் பலன்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி முன்னணி ஜோதிடர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘உதயநிதிக்கு இப்போது கோச்சார ரீதியாக சனிபகவானும், குருபகவானும் சாதகமாகவே இருக்கின்றனர். பாக்ய சனி, லாப குரு பதவி யோகத்தை பெற்று தந்திருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலினின் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் படிப்படியாக பதவி யோகத்தை கொடுத்து வருகின்றன.

உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷ லக்னம் ரிஷப ராசி. மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. கிரகமாலிகா எனப்படும் இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.

உதயநிதி ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் ராசியான ரிஷபத்தில் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன. இது அற்புதமான கிரகமாலிகா யோகம்.

உதயநிதி அவரது தாத்தா கருணாநிதியைப் போல அரசியலில் சிறந்த தலைவராக வெற்றி பெறுவார் என்று அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் கூறியுள்ளனர். எனவேதான் சினிமாவில் ஓராளவு ஜெயித்த பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார் உதயநிதி. நாற்பது வயதிற்கு மேல் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்தது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதிக்கு தற்போது அமைச்சர் பதவியும் தேடி வந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு சனி மகாதிசை தற்போது நடைபெறுகிறது. திமுகவில் பெரிய தலைவர்கள் பலரும் இருக்கின்றனர். உதயநிதியின் வயதை விட அனுபவசாலி தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். எனவேதான் நிதானமாக காய் நகர்த்தி சனி மகா திசையில் பதவியை அளித்துள்ளனர். சனி திசையில் சனி பகவான் நன்மையே செய்வார் என்பதால் இளைஞரணி செயலாளர் பதவியை கொடுத்த திமுக தலைமை இப்போது அமைச்சர் பதவியையும் அளித்துள்ளது.

வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையாக எழுந்துவிடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுநாள்வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் உதயநிதி அமைச்சராவதற்கான கால நேரம் கைகூடி வந்துள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி புதன்கிழமை மகம் நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில் காலை 9.30 மணிக்கு குரு ஹோரையில் அமைச்சராக பதவியேற்கப் போகிறார் உதயநிதி ஸ்டாலின்.

நவ கிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களை அரசு கிரகங்கள் என்பார்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முழுமையான பலம் பெற்று இருந்தால், உலகம் போற்றும் உத்தமத் தலைவன் என்ற பெயர் எடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும். நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும். ஜாதகத்தில் நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் 40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார்’’ என்றனர்.

அமைச்சரவையில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருப்பதைப் போல மக்கள் ஆதரவும் இருந்தால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும். அமைச்சர் பதவியில் அமரப்போகும் உதயநிதி ஸ்டாலின் தாத்தா கருணாநிதியைப் போல கட்சித்தொண்டர்களை மட்டுமல்லாது பொது மக்களையும் வசீகரிப்பாரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal