உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்… துணை முதலமைச்சராகிறார் என்று உடன் பிறப்புக்கள் நாள்தோறும் கூறிவந்தனர். இந்த நிலையில்தான் நாளை மறுநாள் உதயநிதி இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே, ‘அமைச்சராகும் உதயநிதி… அச்சாரம் போட்ட அன்பில் மகேஷ்’ என்று ‘தமிழக அரசியல்’ இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதே போல், ‘தமிழக அரசியல்’ டாட் காமிலும், அமைச்சராகும் உதயநிதிக்கு அரசு முத்திரையுடன் கூடிய கார் தயாராவதையும் செய்தியாக போட்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் உதயநிதி அமைச்சராவது உறுதியாகிவிட்ட நிலையில், அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
‘‘சார், வருகிற 14&ந்தேதி காலை 9.30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். அதே சமயம், நான்கு அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்படுகிறது. அதாவது, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமிக்கு ஊரக உள்ளாட்சித்துறையும், அமைச்சர் பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும் வழங்கப்பட இருக்கிறது.
அதே போல், மதிவேந்தன் வகித்து வரும் சுற்றுலாத்துறை, வனத்துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனுக்கும், வனத்துறை மதிவேந்தனுக்கும் வழங்கப்பட இருக்கிறது’’ என்றனர்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். அதே சமயம் அவர்கள் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியோடு 14&ந்தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்!