‘மதுவுக்கு அடிமையானதால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது’ என பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா மனம் திறந்திருக்கிறார்!
பாலிவுட்டில் நட்சத்திர நடிகையான மனிஷா கொய்ராலா, சௌதாகர் என்ற இந்தி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.மராத்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஆங்கிலப்படம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மனிஷா கொய்ராலாவை தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை மணிரத்னத்தையே சேரும். அரவிந்த் சாமி நடித்த பம்பாய் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பம்பாய் படத்தில் ‘கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்று பாட்டு பாடி இளசுசுளின் இதயத்தை களவாடினார்.
பம்பாய் படம் வெளியாகி வருஷம் பல ஆனாலும், இந்த பாடல் தற்போது வரை அனைவரின் பேவரைட் பாடலாக உள்ளது. இன்றைய இளசுகளின் பிளே லிஸ்டிலும் இந்த பாடல் இடம் பிடித்துள்ளது. முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார், முதல்வன் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாபா படத்திலும், ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் என கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கினார். இதையடுத்து, மாப்பிள்ளை படத்தில் தனுஷின் மாமியாராக நடித்த மனிஷா அதன் பின் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான மனிஷா, கருத்துவேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்தார். இதையடுத்து, கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார். ‘ஹவ் கேன்சர் கிவ்மீ எ நியூ லைஃப்’ என்ற புத்தகத்தை எழுதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அவ்வப்போது, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் மனிஷா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், கேமராவுக்கு முன் தைரியமாக நடிக்க மது அருந்த தொடங்கினேன். அது நாளடைவில் பழக்கமாக மாறி மதுவிற்கு அடிமையாகி விட்டேன். சில நேரம் மது குடித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலைமையாகி விட்டது. மதுவால் வாழ்க்கையே அழிந்து நாசமாகவிட்டது. அதன் பின், புற்றுநோய் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் பாடத்தை கற்றுக்கொண்டேன் என மனிஷா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.