இந்தியாவில் பா.ஜ.க., காங்கிரசுக்கு அடுத்து ‘ஆம் ஆத்மி’ கட்சி வளர்ந்து வருகிறது. இக்கட்சி பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே வாங்கி காங்கிரசுக்கு சறுக்கலையும் பி.ஜே.பி.வளர்ச்சியையும் கொடுத்து வருவது குஜராத் தேர்தலில் உறுதியாகிவிட்டது!

இந்தநிலையில்தான், குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி இப்போது அடுத்த திருவிளையாடலை தொடங்கி உள்ளது. குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் 5 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாக உள்ளனராம்.

காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவும் மாநிலங்களில் எல்லாம் பாஜகவை வீழ்த்த புறப்பட்டுவிட்டோம் என மார்தட்டி தேர்தல் களத்தில் குதிப்பது ஆம் ஆத்மியின் வாடிக்கை. ஆனால் ஆம் ஆத்மி மிகப் பெரும் வெற்றியை பெறுவது என்பது எல்லாம் எதிலும் நடந்துவிடவில்லை பஞ்சாப் தவிர..

ஆம் ஆத்மியின் இலக்கு காங்கிரஸிக்கு பேரழிவை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. இது மறைமுகமாக பாஜகவுக்கு உதவும் வகையில் இருக்கிறது. பஞ்சாப்பில் பாஜகவுக்கு செல்வாக்கே இல்லை; காங்கிரஸில் உட்கட்சி மோதல் தலைவிரித்தாடியது.. அம்மாநில சட்டசபை தேர்தலில் களமிறங்கி காங்கிரஸை காலி செய்து ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி.

கோவா, உத்தரகாண்ட், குஜராத் மாநிலங்களிலும் இதே பார்முலாவுடன் களமிறங்கியது ஆம் ஆத்மி. இதனால் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள், அதாவது காங்கிரஸுக்கு போக வேண்டிய வாக்குகள் சின்னாபின்னமாக சிதறின. காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாநிலங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் மிக எளிதாக அதிகாரத்தை பாஜகவால் கைப்பற்ற முடிந்தது.

குஜராத் தேர்தலைப் பொறுத்தவரையில் 6 முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக எதிர்ப்பு அலை இருந்து வந்தது. 2017-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை மிரட்டும் வகையில் இடங்களை காங்கிரஸ் பெற்றது. இதனால் இந்த தேர்தலை பாஜக அச்சத்துடன் எதிர்கொண்டது. ஆனால் தேர்தல் முடிவுகளோ பாஜகவுக்கு இமாலய வெற்றியை கொடுத்தது. இதற்கு காரணமே ஆம் ஆத்மி கட்சிதான். ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் எத்தனை தோல்வி வந்தாலும் சுமார் 40% வாக்குகள் கிடைத்து வந்தன. இம்முறை சுமார் 13% வாக்குகளை ஆம் ஆத்மி கபளீகரம் செய்துவிட்டது. இதனால் பல தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

அதாவது பாஜகவின் பி டீமாகவே ஆம் ஆத்மி ஒவ்வொரு மாநில தேர்தல் களத்திலும் செயல்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஆம் ஆத்மியின் 5 குஜராத் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாக செய்திகள் வலம் வருகின்றன. இதனை ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மறுக்காமல் ஆமோதிப்பது போல கருத்துகளை தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal