அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஊக்கத்துடனும்… உத்வேகத்துடனும் படிப்பதற்காக உணவுடன் கலந்து முட்டையும் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு ‘அழுகிய’ முட்டை வழங்கப்படுவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்!

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, சில மாவட்டங்களையும், சில பள்ளியின் பெயர்களையும் புள்ளி விபரத்துடன் குறிப்பிட்டு, அங்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் முட்டைக் கொள்முதலில் ஊழல் நடப்பதாகவும் சொன்னார்.

இப்படி பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டையை வழங்கும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, அழுகிய முட்டைத்துறைக்கு அமைச்சர் ஆக்கலாம். முட்டை கொள்முதலில் ஊழல் நடப்பதால் அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் குற்றச்சாட்டினார்.

இந்த நிலையில்தான் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு ‘ஓருமையில்’ பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், ‘‘முட்டைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு சம்மந்தப்பட்ட அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும்போது போக்குவரத்தின் காரணமாக சில முட்டைகள் உடைந்து அழுகும் நிலை ஏற்படுகிறது.

இந்த மாதிரியான முட்டைகள் கண்டறியப்பட்டு ஒப்பந்தகாரர்களிடம் கொடுக்கபட்டு மாற்றப்பட்டு அதே எண்ணிக்கையில் மீண்டும் பெறப்பட்டு வருகிறது. இதுதான் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதைப்போல 6 இடங்களில் இல்லை 50 இடங்களில்கூட நடந்திருக்கலாம். இது எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற வழிமுறைதான். முட்டை கொள்முதல் வெளிப்படையாகவே நடக்கிறது. இதில் ஊழல் என்ற பேச்சிற்கே இடமில்லை. இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளேன். ஆனால், இது அவர் மண்டையில்தான் ஏறவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பது தெளிவாகிறது. அவரது பேச்சு அர்த்தமற்றது.’’ என்றார்.

அமைச்சர் கீதாஜீவன் மீது அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து, தூத்துக்குடி உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘தூத்துக்குடி என்றால் நினைவுக்கு வருவது என்னவோ உப்பு தான். ஆனால் உப்பிட்ட மக்களையும் ஊரையும் மறந்து கொள்ளையடித்து வருமானம் ஈட்டுவேன் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சமூக நலன் துறை அமைச்சர் செயல்படுகிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை பொறுத்த வரை மாவட்ட செயலாளராகவும் மந்திரியாகவும் இருப்பவர் திருமதி.கீதா ஜீவன் அவர்கள். அவர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறை மட்டுமல்லாது வடக்கு மாவட்டத்தின் கீழ் வரும் அனைத்து அரசுத் துறை டென்டர்களிலும் தனக்கு வேண்டிய நபர்களுக்கு பணிகள் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்து கமிஷன் கேட்டு வருகிறார். குவாரிகளில் தண்டால் முறையில் தினமும் லட்சக் கணக்கில் பணம் வகுல் செய்வது மட்டுமல்லாது களவு மண் அடித்து பணம் கேட்பது என்பது தொடர்கதையாகிவிட்டது.

ஆந்திராவில் தனது பினாமி பெயரில் பல கோடி மதிப்புள்ள கிரானைட் குவாரி, சொகுசு வாகனங்கள், தற்பொழுது மாநகரின் மையப் பகுதியில் தனது மகனுக்கு மருத்துவமணை அமைக்க பல கோடி மதிப்பிலான இடம், சென்னையில் சொகுசு பங்களா…’’ என பட்டியலை அடுக்கினார்கள்!

இந்த விவகாரம் எல்லாம் ‘தலைமைக்கு’ தெரியுமா..? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் ஒவ்வொரு உடன் பிறப்புக்களும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal