குஜராத்தில் அசுர பலத்தில் வெற்றி பெற்று பா.ஜ.க. சரித்திர சாதனை படைத்திருக்கிறது. குஜராத்தில் 7&வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது பா.ஜ.க.! இந்த நிலையில்தான் வருகிற 12&ந்தேதி பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்க இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், இமாச்சலில் ஆட்சி அமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், 39 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. குஜராத்தில் பதவியேற்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இமாச்சலில் பதவியேற்பு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவா, திரிபுரா போன்ற மாநிலங்களில் ‘ஆபரேஷன் தாமரை’ என்ற முறையில் அறுவடை செய்ய பா.ஜ.க. தயாராகி வருகிறதா என்ற விசாரணையில் இறங்கினோம்…

இமாச்சல் பிரதேசத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் யார் ஜெயிக்கப்போவது என்பதே கேள்வியாக இருந்தது.

இன்று வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில் பாஜகவின் ஆட்சியை இறக்கிவிட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக தெரிகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கு மேல், 39 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் பாஜக 26 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியோ எந்த இடங்களில் முன்னிலை வகிக்கவில்லை.

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் என மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாகவே வெளிவந்தன. இந்நிலையில் களநிலவரம் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை தொடர்ச்சியாக பாஜகவிடம் ஆட்சியை இழந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹிமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங், எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, முன்னாள் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அகில இந்திய தலைவர் மாற்றம், இந்திய ஒற்றுமை பயணம், பிரியங்கா காந்தி பிரச்சாரம் என பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் இறுதிக்கட்ட பிரச்சாரம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இமாச்சல் தேர்தல் முடிவு பாஜக தரப்பினருக்கு அதிருப்தியை தந்துள்ளது.பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் சொந்த மாநிலம் தான் இமாச்சல பிரதேசம். நட்டாவின் சொந்த மாநிலத்தில் தோல்வி என்பது பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது என்றாலும், இமாச்சலில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் வேலையில் பாஜக இறங்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

ஏற்கனவே கோவா, திரிபுரா போன்ற பல மாநிலங்களில் செய்த அதே பார்முலாவை மீண்டும் பாஜக கையில் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள். அதாவது ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்து ஆட்சி அமைப்பதே ஆகும். இமாச்சல் ஆளுநர் ஆர்.வி ஆர்லேகர் இதற்கு உடன்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரோ, அவரே ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு. எனவே கோவாவில் ஏற்பட்ட அதே நிலை இங்கும் நடக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியும் உறுதியாக இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான ஆரம்பத்திலேயே தன் கட்சி எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பலாம் என்று காங்கிரஸ் தலைமை திட்டம் தீட்டி களத்தில் இறங்கியுள்ளது. பாஜகவின் திட்டம் இங்கு வெற்றி பெறுமா ? என்பதும் சந்தேகம் தான். அதே சமயத்தில் ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறார் ? கடந்த ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குதிரை பேரம் நடக்குமா? போன்றவை யார் ஆட்சியை அமைப்பது என்பதை தீர்மானிக்கும் என்பதே தற்போதைய கள நிலவரமாக இருக்கிறது.

மேலும், குஜராத்தில் பதவியேற்கும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இமாச்சலில் இன்னும் அறிவிக்கப்படாததுதான் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal