எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், அடுத்ததாக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு வருகிறார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் நிலையில், தனது அணியில் புதிதாக பொதுக்குழு உறுப்பினர்களையும் நியமித்து வருகிறார் ஓபிஎஸ். அந்தவகையில், இன்று இரண்டு மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சென்னையை ஒட்டிய 19 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் – – & இபிஎஸ் இடையே உட்கட்சி பூசல்கள் நீடித்து வரும் நிலையில், கட்சியைக் கைப்பற்றுவதில் இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்துத் தான் அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெரியவரும். இதற்கிடையே, தேர்தல் கூட்டணி தொடர்பான மோதல்களும் அரங்கேறி வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார். அதேசமயம், ஓபிஎஸ், தான் தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இரு தரப்புமே, தனித்தனியாக புதிதாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர். இந்நிலையில், ஓபிஎஸ், புதிதாக பொதுக்குழு உறுப்பினர்களையும் நியமித்து வருகிறார். அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகளை நியமித்த பிறகு, பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தனது அணி சார்பில் தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்: மாவட்ட அம்மா பேரவை செயலாளர்-இ.சி. ஆர்.மூர்த்தி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர்-ரகுமான், இளைஞர் அணி செயலாளர்-பிரவீன் குமார், துணை செயலாளர்-கணேஷ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்-அருள் வேலு, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள்-திருநாவுக்கரசு, பார்த்திபன், வர்த்தகர் அணி துணை செயலாளர்-ஆனந்தன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள்: அவைத்தலைவர்-துரை சிங்கம், மாவட்ட இணை செயலாளர்-பொம்மி, துணை செயலாளர்கள்-தேவி, கீதா, நரேஷ்குமார், பொருளாளர்-ஏ.சி.வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள்-துளசி (மயிலாப்பூர்), ஜெயசெல்வி-(வேளச்சேரி), பகுதி செயலாளர்கள்-பானு (மயிலாப்பூர் கிழக்கு), சி.எஸ்.மணியன் (மயிலாப்பூர் வடக்கு), டேவிட் (மயிலாப்பூர் மேற்கு), தரமணி தினேஷ் (வேளச்சேரி மத்தி), வெங்கடேஸ்வரன் (வேளச்சேரி மேற்கு).

மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்-தேவதாஸ், இணை செயலாளர்-ராதா தேவி, துணை செயலாளர்-ருத், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர்-சண்முகம், செயலாளர்-வீடியோ முனியாண்டி, இணை செயலாளர்-தங்கராஜ், இளைஞர் அணி செயலாளர்-அசோக்குமார். மாவட்ட மகளிர் அணி செயலாளர்-துளசி கோபு, துணை செயலாளர்-கிருஷ்ணவேணி, பொருளாளர் -அம்மு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்த ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் வேகம் காட்டி வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டிசம்பர் 6ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த அதிரடி நியமனங்களால் இபிஎஸ் தரப்பினர் குழப்பமடைந்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal