‘ஒரே கட்சி… ஒரே கொடி… என்று இருந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி ஆக முடியாது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் முக்கிய பதவிகளை பிடிக்கலாம்’ என தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவரான முக ஸ்டாலின் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்தும் வகையில் திமுக சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ஆர்எஸ் புரத்தில் நடந்த நிகழ்ச்சியின் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்எஸ் பாரதி பேசினார். அப்போது அவர்,
‘‘எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ, எம்பி ஆகிவிட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காத நிலையில் உழைக்காதவர்கள் பதவியில் அமர்ந்துள்ளனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது; அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும்’’ என பேசினார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு சட்டசபை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும் உடன்பிறப்புகள் மத்தியில் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை வெளிக்காட்டும் வகையில் தான் மூத்த தலைவரான ஆர்எஸ் பாரதி மேடையில் பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சீனியர்களின் மனக்குமுறல்கள் பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம்.
‘‘சார், கலைஞர் இருக்கும் போது சீனியர்களுக்கு மரியாதை கிடைத்தது. ஆனால், கலைஞருக்கு என்ன மரியாதை கொடுத்தோமோ அதைத்தான் ஸ்டாலினுக்கும் கொடுக்கிறோம். ஆனால், மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை. மேலும், அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துறைகளை கொடுத்து வருகிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். அவருக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.வில் உள்ள சீனியரான ஐ.பெரியசாமிக்கு ‘டம்மி’யான துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் ஐ.பெரியசாமி, இன்னும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பங்களாவிற்கு அவ்வளவாக செல்வதில்லை.
அதே போல், மலைக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவரே கே.என்.நேருதான். அவருக்கும் உள்ளாட்சித் துறையை இரண்டாக உடைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி தி.மு.க.வில் கட்சிக்காக உழைத்த சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதுதான் வருத்தமளிக்கிறது.
இதனை பலமுறை ‘தளபதி’யாரிடம் மறைமுகமாக கூறிவிட்டோம். ஏன், அண்ணன் துரைமுருகனிடமும் பல முறை கூறிவிட்டோம். அவர், ‘நான் என்ன செய்ய… என் பேச்சே எடுபடல…’ என்று ஒரே போடாக போட்டுவிட்டார். எனவே, ஆர்.எஸ்.பாரதியின் மனக்குமுறலை ஒவ்வொரு சீனியரும் வரவேற்கிறார்கள்!
தி.மு.க.வில் உள்ள சீனியர்களின் மனக்குமுறலை முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதன் பலன் எதிரொலிக்கும்’’ என்றனர்!
தி.மு.க.வின் செய்தி தொடர்பாளராக இருந்து, சமீபத்தில் நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி ஒருவார்த்தை சொல்வார், ‘தகுதியே தடை…! எனக்கு பை தூக்கியவர்கள் எல்லாம் எம்.பி., மந்திரி ஆகிவிட்டார்கள்’ என்று, அதுதான் தற்போது நினைவுக்கு வருகிறது!