எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ளாதா? என குழப்பம் நிலவி வந்த நிலையில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன்தான் பா.ஜ.க. கூட்டணி’ கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

கோவையில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வானதி சீனி£வசன், அவர் பேசுகையில்,

‘‘திமுக நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிந்தும் பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய் கூறி நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கோவையில் முக்கிய சாலைகள், பாலங்களின் நிலை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாகிக் கொண்டுள்ளது.

இந்த சாலைகளை சரி செய்ய கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த சாலைகளில் கர்ப்பணிகளும் வயதானவர்களும் பயணிப்பதே கடினமாக உள்ளது. மேலும் இனி வரும் மழைக்காலங்களில் இந்த குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு மேலும் தகுதியற்றதாக மாறிவிடும்’’ என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து பேசினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வானதி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ‘‘இந்தியாவில் அதிகமாநிலங்களில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்தாலும், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி’’ என அடித்துக் கூறினார், தவிர, கூட்டத்தில் பேசும்போது, ‘‘எனது வெற்றிக்குப் பின்னால், அ.தி.மு.க. இருக்கிறது. எனது வெற்றிக்கு அ.தி.மு.க.வினர் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்’’ என்று கூறியதோடு, ‘‘அண்ணன் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருக்கும் அண்ணன் ஆர்.பி.உதயகுமார், அண்ணன் பொள்ளாச்சி ஜெயராமன்’’ என உரிமையோடு வானதி சீனிவாசன் பேசியதை அ.தி.மு.க.வினரே வியந்து பார்த்தனர்!

இது போல் சட்டசபை கூட்டத் தொடர்களிலும் இரு கட்சிகளும் பரஸ்பரம் ஆதரவு தெரிவித்து தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்து வருவதையும் பார்த்துள்ளோம். தற்போது அதே ஒற்றுமையுடன் இருப்பதை வெளிக்காட்டும் விதமாக அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு வானதி சென்றுள்ளார். மேலும் தான் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆர் பி உதயகுமார் ஆகியோருக்கு நடுவே அமர்ந்துள்ள படத்தை வெளியிட்டு அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக ஆதரவு அளித்ததையும் வானதி சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதையே வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal