எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது, நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை பதிவிட்டிருந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், அறப்போர் இயக்கத்தின் செயல் தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்ததாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தார். மேலும், தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவு செய்வதற்கும் தன்னைப்பற்றி பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும், 1.10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, எந்த அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது கொள்கை முடிவு, அதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்று குறிப்பிட்டார்.

டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் சார்பில் யாரும் டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக எந்த வழக்கும் தொடரவில்லை. புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மலிவான விளம்பரத்திற்காகவும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், தங்களிடம் இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்றும், அறப்போர் இயக்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அதன்படி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். மேலும், டெண்டர் முறைகேடு புகாரில் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal