அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நீக்கி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார். அவர்களுடன் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்டு வருகிறார். மேலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை கொண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் எடப்பாடி தொகுதி, சங்ககிரி தொகுதியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சேலம் மேற்கு புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அதன்பின் எடப்பாடி ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘‘எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிக்க துடித்து வருகிறார். அவர் அ.தி.மு.க.வை ஒரு சமுதாய கட்சியாக மாற்ற நினைக்கிறார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினார்களோ அதற்காக தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்று சேர தயாராகி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையால் தி.மு.க. அரசின் தவறுகளை கூட சுட்டிக்காட்ட முடியாத நிலை உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. விரைவில் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் பொதுக்கூட்டத்தை எடப்பாடி தொகுதியில் நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் மாபெரும் எழுச்சி ஏற்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்’’ இவ்வாறு அவர் கூறினார்.