நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 71 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். இதனை தொடர்ந்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல் தீர்மானமாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் இனமானப் பேராசிரியர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் எனவும், கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மற்றொரு தீர்மானமாக நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15 (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் வாக்கு சாவடி முகவர்களை ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சரியான முறையில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம். ஒரு தொகுதியை இழந்து விட்டதாக தெரிவித்தார். எனவே இந்த முறை அப்படி இல்லாமல் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்க்கு தேவையான கட்டமைப்பை தற்போதே தொடங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் நெருக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal