அ.தி.மு.க.வைக் கைப்பற்ற ஓ.பி.எஸ். புதிய ‘வியூகம்’ வகுத்து வருவதும், அதனை முறியடித்து எடப்பாடி தரப்பு ‘தாங்கள்தான் அ.தி.மு.க.’ என நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டு பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது என்றும் எனவே பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர்.
இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி அளித்த தீர்ப்பில் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை மையமாக வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தேவையான கூடுதல் ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் அதனை வைத்து அ.தி.மு.க.வை கைப்பற்றி விடலாம் என்று ஓ.பி.எஸ். கணக்கு போட்டு வைத்து உள்ளார். அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார். இதற்காக தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.
இதற்கு முன்பு பொதுக்குழு கூட்டங்கள் எப்படி நடந்தன? எடப்பாடி கூட்டிய பொதுக்குழு கூட்டம் எப்படி நடந்தது என்பதை எல்லாம் ஒப்பிட்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ஓ.பி.எஸ். வக்கீல்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாக வியூகம் வகுத்து வருகிறார். ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தங்களுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பை சுட்டிக் காட்டி அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்பதை எடுத்துக் கூற உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்காக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயாரித்து வைத்துள்ள எடப்பாடி ஆதரவு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையோடு காய் நகர்த்துகிறார்கள். டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்களும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து கோர்ட்டிலும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு நிர்வாகிகள் 6-ந் தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது போல, பொதுக்குழு வழக்கிலும் நிச்சயம் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால், அ.தி.மு.க.வை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!