பாராளுமன்ற தேர்தல் 2024-ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்த தி.மு.க. முதல் முறையாக புதிய அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது.
ஏற்கனவே காணொலி வாயிலாக பூத் ஏஜெண்டுகளுடன் கலந்துரையாடிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் `பூத் ஏஜெண்டுகளுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து உதவுவோம். நீங்கள் தேர்தல் பணியில் இப்போதே தீவிரமாக ஈடுபடுங்கள் என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் ஏஜெண்டுகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசு மழை கொட்டுகிறது. பெரு நகரமான சென்னையில் 200 வட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை கட்சி பணிகளுக்காக வழங்கப்படுகிறது. இவர்களில் வசதி படைத்த சிலர் அந்த பணத்தை தனக்கு கீழ் நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பிரித்து கொடுத்து உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த தொகை நகரங்கள், ஊரக பகுதிகளை பொறுத்து மாறுபடுகிறது.
மானாமதுரையில் 323 பூத் ஏஜெண்டுகள் உள்ளார்கள். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தமிழரசி செல்போன்கள் வழங்கினார். சேங்கை மாறன் (திருப்புவனம்) நஜீமுதீன் (இளையார்குடி) ஆகியோர் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் பூத் ஏஜெண்டுகளுக்கு தலா ரூ.1 லட்சம், அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என்று பரிசுகளை அள்ளி வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.
நாகர்கோவிலில் வட்ட செயலாளர்களுக்கு கடந்த மாதம் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின்போது அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
வருகிற பொங்கல் தினத்துக்கும் பெரிய அளவில் பரிசுகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக அந்த மாவட்ட தி.மு.க.வினர் பேசி கொள்கிறார்கள். இதேபோல் மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நிர்வாகிகளுக்கு சில இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறை சில இடங்களில் 3 மாதத்துக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகுதி செயலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வட்ட செயலாளர்களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.50 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது. இதுபற்றி கட்சி நிர்வாகிகள் கூறும்போது சில நேரங்களில் கட்சியினர் நன்கொடை வசூலிப்பதில் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்பட்டு விடுகிறது. அந்த மாதிரி யாரும் வசூலிக்க கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்க்காத வகையில் ‘உற்சாக டானிக்’கை வழங்க முடிவு செய்திருக்கிறதாம் தி.மு.க. தலைமை..?