ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், அம்மசோதா காலாவதியானது. இந்த நிலையில்தான் கவர்னர் பதவியே காலாவதியானது என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது. கவர்னர் பதவி என்பதே காலாவதியான விஷயம். கவர்னர் பதவி இல்லையென்றால் இந்நேரம் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்திருக்க முடியும். கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் போனாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும். எதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைத்த வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில்,

‘‘வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் சில பாடங்கள் மாணவர்களுக்கு புரியாது. மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இத்திட்டத்தில் பாடங்கள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்படுகிறது. அப்போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதில் புரியும். மாணவர்கள் யூ-டியூப்பில் அறிவியல் சம்பந்தமான வீடியோக்களை பார்த்து, அதில் எழும் சந்தேகங்களை பள்ளியில் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் பா.ஜ.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal