அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அதிமுகவானது ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதில் இபிஎஸ் தரப்பினர் ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இபிஎஸ் கோஷ்டி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க கோரும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுவதாக இருந்தது.

பிறகு, நாளை விசாரணை பட்டியலில் இடம்பெறாததால், எடப்பாடி பழனிசாமி தரப்பு, ‘அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கிறது. எனவே, வழக்கு விசாரணை விரைந்து முடிக்க வேண்டும்’’ என முறையிட்டது.

ஓ.பி.எஸ். தரப்பு, ‘‘இவ்வழக்கு விசாரணையை டிசமப்ர் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்ததோடு, ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்து, டிசம்பர் 6-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal