தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அச்சட்டம் காலாவதியாகிவிட்டது!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம் என்பது மிகப்பெரிய உயிர்கொல்லி விஷயமாக உள்ளது. ஆன்லைன் ரம்மி காரணமாக பலர் பலியாகிவிட்டனர்.பல கோடிகளை இழந்து மக்கள் உயிரை விடும் அவலம், தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நம் நாட்டில்தான் உள்ளது.

ஆனாலும் இதற்கு எதிரான வலுவான தடை சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. முக்கியமாக கொண்டு வரப்பட்ட தடை சட்டங்களுக்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் ஒன்று கோர்ட்டுக்கு செல்கிறது. அல்லது அந்த தடை சட்டங்களையே ஆளுநர்கள் டெல்லிக்கு அனுப்பாமல் நிராகரிக்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி காரணமாக நிறைய பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். முதலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை வெல்லும் மக்கள், பின்னர் அதில் நிறைய தொகையை வெல்லலாம் என்று நம்பி தங்கள் சேமிப்பு தொகை, வருமானத்தை எல்லாம் இழக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை கொண்டு வந்தால் தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக கோர்ட்டுக்கு செல்லும். அப்படி செல்லும் வகையில் இருக்க கூடாது. கோர்டுக்கு போனாலும் வலுவாக இருக்க வேண்டும். கோர்டில் சட்டம் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை உருவாக்கி உள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு அதன்பின் அவசர சட்டசமாக கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டசபையிலும் இது நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்றோடு (27&ந்தேதி) கடைசி நாள்! கடைசி நாளன்றும் கவர்னர் கையெழுத்து போடாததால், அவசர சட்டம், அரசமைப்பு சட்டவிதிகளின் படி, இச்சட்டம் நேற்றோடு காலாவதியாகிவிட்டது.

ஆளுநர் சமீபத்தில் கேரளாவில் பேசுகையில் ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. பவர் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவர் தனது பவரை காட்டும் விதமாக இந்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு. அதன்பின் விளக்கம் வந்தும் அதை டெல்லிக்கு அனுப்பாமல் ஒரு சட்டத்தையே முடக்கி இருக்கிறார் என்கிறார்கள்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு எதிராக திருப்பப்பட்டாலும், ஆளுநரின் அதிரடியால் அடுத்த என்ன செய்வது என்ற பதற்றத்தில் இருக்கிறது தி.மு.க.!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal