

பதினோராம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை… போன்ற செய்திகளை படித்திருக்கிறோம். ஆனால், கல்லூரி ஆசிரியைக்கு மாணவர்கள் ‘ஐ லவ் யூ’ சொன்ன விவகாரம்தான் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் இயங்கி வருகிறது ஒரு இன்டர்மீடியட் கல்லூரி. இருபாலர் கல்லூரியான இதில் மாணாக்கர்கள் பலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு மாணவர்கள் சிலர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொந்தரவளித்து வந்திருக்கின்றனர். ஆசிரியையை ஒருமையில் அழைப்பதும், அவரது அனுமதியின்றி வீடியோக்கள் எடுப்பதும் தொடர்கதையாகி இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில், இது தொடர்பாக ஆசிரியை அவ்வப்போது எச்சரிக்கை செய்து வந்திருக்கிறார். ஆனால் மாணவர்கள் இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் மாணவர்களின் அட்டகாசம் அத்துமீறியுள்ளது. மாணவர்கள் ஆசிரியையை பார்த்து ‘ஐ லவ் யூ’ என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை மாணவர்களின் பெற்றோரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால், இதன் பின்னரும் மாணவர்களின் சேட்டை அடங்கவில்லை. வகுப்பறையில் மட்டுமல்லாது கல்லூரி வளாகத்தின் பொது இடங்களிலும் இவ்வாறு மாணவர்கள் சேட்டை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து ஆசிரியை எவ்வளவோ விளக்க முயன்றும் மாணவர்கள் அதை புரிந்துகொள்ளாமல் சேட்டையை தொடர்ந்திருக்கின்றனர். இந்த சேட்டையை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
சமீபத்தில் ஆசிரியரின் உறவினர் ஒருவர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு கண்டித்திருக்கிறார். வீடியோவில், ஆசிரியையின் பெயர் சொல்லி அழைத்த மாணவர்கள் ‘ஐ லவ் யூ. இங்க கொஞ்சம் பாருங்க’ என்று கூறியுள்ளனர். இது கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. இதனையடுத்து ஆசிரியை தரப்பில் கித்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மீது ஐ.பி.சி. பிரிவு 354, 500, 67 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விஷயம் பெரியதானதை அறிந்த மாணவர்கள் திடீரென தலைமறைவாகினர். ஆனால் ஒரு சில மணி நேரங்களிலேயே அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் கேசவ் குமார் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீண்ட நாட்களாக ஆசிரியையை தொந்தரவு செய்து வந்திருக்கின்றனர். ஆசிரியையும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாணவர்கள் கேட்கவில்லை. எனவே வேறு வழியின்றி அவர் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
