தமிழகத்தில் காங்கிரஸில் எப்படி கோஷ்டி பூசல் இருக்கிறதோ… அதைவிட ஒரு மடங்கு அதிகமாக பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது.

கடந்த சில மாதங்களாகவே காயத்தி ரகுராமிற்கும் அண்ணாமலைக்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அதாவது தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்துவந்தார் காயத்திரி ரகுராம்.

இந்த நிலையில் தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். தன்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை.

கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 8 வருட உழைப்பை களங்கம் என்று கூறினால் எனக்கு கோபம் வரும். என் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது. மேலிடத்திற்கு என்னை பற்றி தவறான கருத்துக்கள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம். ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை.

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன். கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர்தான். என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை. பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கவில்லை’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal