தமிழக பா.ஜ.க.வுக்கும், பாலியல் சர்ச்சைகளுக்கும் பிரிக்க முடியாத அளவிற்கு அப்படி என்ன சம்பந்தம் என மூத்த நிர்வாகிகளே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு பாலியல் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்பவர் பாலியல் சர்ச்சையில் சிக்கினார். அடுத்து சசிகலா புஷ்பாவுக்கு கூட்டத்திற்கு மத்தியில் அவரது கையை தொடுவது, இடுப்பை கிள்ளுவது போன்ற பாலியல் சர்ச்சைகள் தொடர்ந்தன.

இந்த நிலையில்தான், பாஜகவில் பதவி வழங்குவதில் சூர்யா சிவாவிற்கும், பெண் நிர்வாகி டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் அர்ஜனை செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மற்றும் திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து திமுக நிர்வாகிகளை தொடர்ந்து விமர்சித்து பல்வேறு கருத்துகளை சூர்யா தெரிவித்தார். இதன் காரணமாக அண்ணாமலையிடம் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். மேலும் அண்ணாமலையில் குட்புக்கில் சூர்யா சிவா இடம்பெற்றார். இந்தநிலையில் பாஜகவில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

மருத்துவர் டெய்சி சரண் யூடியூப் சேனல்களில் மருத்துவ குறிப்புகளை வழங்குவதில் பிரபலமானவர், கடந்த ஆண்டு பாஜகவின் இணைந்த அவருக்கு சிறுபான்மையினர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை போல திருச்சி சிவாவிற்கு ஓபிசி அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாஜக சிறுபாண்மையினர் அணியில் மற்றவர்களுக்கு பதவி வழங்குவதில் இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் திருச்சி சிவா மற்றும் டெய்சி சரண் என இருவரும் மாறி, மாறி சண்டை போட்டுக்கொள்கின்றனர். மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் டெய்சி சரணை சூர்யா திட்டியும் உள்ளார். மேலும் பாஜகவில் நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பதவி வாங்கினீர்கள் என தெரியும் என மோசமாக வார்த்தைகளால் பாஜக மூத்த நிர்வாகி பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதைவிட மோசமாக கொலை மிரட்டலும் சூர்யா சிவா அந்த பெண் தலைவருக்கு விடுத்துள்ளார். லாரியில் அடிபட்டு இறந்துவிடுவாய் . அநாதையாக சாலையில் கிடப்பாய் எனவும் கூறியுள்ளார். உனது சாவுக்கு நான் தான் பொறுப்பு என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நீ யாரிடம் வேண்டும் என்றாலும் செல் அண்ணாமலையிடம் சொல், அமித் ஷா, மோடியிடம் சொல் என சீண்டியுள்ளார். சென்னையில் மருத்துவமனை நடத்த முடியாது, உனக்கு வாழ முடியாத நிலையை உருவாக்குவேன் என எச்சரித்துள்ளார்.

பாஜகவில் பெண் தலைவருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நேரத்தில் பெண் தலைவருக்கே இந்த நிலையா என மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal