வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி விவகாரத்தில்¢எடப்பாடி பழனிசாமி ‘மாற்றி யோசிப்பதாக’ தகவல்கள் கசிந்த நிலையில், ‘தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பவர்களும் எங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதுதான் தமிழக பா.ஜ.க. அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது,

‘‘ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உடன் தொடர்பில் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அதே குடும்பத்தை ஓ.பன்னீர்செல்வம் சென்று பார்க்கிறார். இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

அ.தி.மு.க.வில் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது ஒரு சதவீதம் ஆதரவு கூட இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வம் கூட்டுவது பொதுக்குழு அல்ல. அது ஒரு பொய்க்குழு.

முறைப்படி கிளை கழகம், பேரூர் கழகம், ஒன்றிய, நகர கழகம், மாவட்ட கழகத்திற்கு தேர்தல் நடத்திய பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி இருக்கையில், இப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆட்கள் தேவை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து பொறுப்பு கொடுத்து இதை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார். கட்சிக்கு தியாகம் செய்தவர்கள்தான் பொறுப்பில் இருக்க வேண்டும்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திடம் எந்த வரலாறும் இல்லாதவர்களே பொறுப்பில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களே உள்ளனர். ஓ.பி.எஸ். நடத்துவது ஒரு கட்சி அல்ல, அது ஒரு நிறுவனம்தான். பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள், ஏன் இப்போது தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்களுடன் வரலாம்.

இப்போது தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளவர்கள் தி.மு.க.வுடன் ஒன்றியுள்ளனரா என்றால் கிடையாது. அவர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவோம் என்று கூறி அரசு ஊழியர்களை ஏமாற்றினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வருடம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆகியும் எதுவும் செய்யவில்லை. அவுட் சோர்சிங் முறையை நடைமுறைப்படுத்தி சமூக நீதிக்கு எதிரான ஒரு கொள்கையை தான் தி.மு.க. கடைபிடித்து வருகிறது.

இந்த ஒன்றரை வருட தி.மு.க. ஆட்சியில் நீங்கள் எத்தனை பேரை அரசு ஊழியர்களாக அமர்த்தி உள்ளீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தை போட்டு நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார்கள். ஆனால் நாங்கள் என்ன கூறினோம். தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேவையில்லை. ஆனால் மாணவர்களை தயார் படுத்துவோம் என்று கூறினோம். தி.மு.க.வினர் ஆசைவார்த்தைகளை கூறியதால் மாணவர்கள் நீட் தேர்விற்கு படிக்கவில்லை. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதைப்பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என காங்கிரசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் மனதில் வைத்துதான் சூசகமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal