அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது விரைவில் ஓ.பி.எஸ். தரப்பும் பொதுக்குழுவைக் கூட்டி, ஓ.பி.எஸ்.ஸை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்த நிலையில்தான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த முடிவை எடுக்கிறாரோ… அதுதான் எங்களின் முடிவு எனக் கூறி அதிர வைத்திருக்கிறார் ராஜன் செல்லப்பா..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ‘‘கடந்த திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெறும் 2,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவி விட்டோம். ஆனால் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து நின்று 30,000 வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்று உள்ளோம். அடுத்து ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் திமுக நம்மை வீழ்த்த முடியாது. முன்பு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எப்படி அதிமுகவைக் காப்பாற்றினாரோ, அதேபோல் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவைக் காப்பாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தமிழக அரசைக் காப்பாற்றாமல் விட்டிருந்தால், அதிமுக மிகப் பெரிய அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கும்.. கடந்த 4.5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரியாக இருந்து, அரசைச் சிறப்பாக நடத்தினார். பல்வேறு திட்டங்களையும் நாட்டு மக்களுக்குத் தந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பின் இரட்டை இலையைக் காப்பாற்றும் சக்தி படைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான். ஜெயலலிதாவுடன் 1989ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் எடப்பாடி. இது மட்டுமின்றி தென் மாவட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பல தொடர்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, நான் உட்படப் பலரும் நேரடியாக ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவர்கள்.
எம்ஜிஆர் காலத்திலும் அவருடன் பயணித்து உள்ளோம்.. எடப்பாடி பழனிசாமி மட்டுமே இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்க முடியும், அதனால்தான் இந்த இயக்கத்தின் மூத்த முன்னோடிகள் அனைவரும் அவருடன் இருக்கிறோம். தவறு செய்தவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் எடப்பாடி மீண்டும் சேர்த்துக் கொள்வார். அந்த பக்குவம் அவரிடம் உள்ளது. திமுகவை எதிர்க்க வலிமைமிக்க தலைவராக எடப்பாடி உள்ளார். திமுக எல்லா கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. ஆனால், நாங்கள் இப்போது பாஜக உடன் கூட்டணி வைத்ததை விமர்சிக்கிறார்கள். அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி எந்த முடிவெடுக்கிறாரோ, அதுதான் எங்கள் முடிவு.
நீட் தேர்வு குறித்து பல்வேறு பிரச்சனை எழுந்த பொழுது, அதை எதிர்கொள்ள 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதன் மூலம் 465 அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று மருத்துவ படிப்பு பெற்றுள்ளனர் . அதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அதேபோல் குடிமராமத் திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்கள் அதிகரிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார். அதேபோல் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியுடன் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி மக்கள் நலனில் மட்டும் அக்கறை கொண்டு உள்ளார்.
இன்றைக்குத் திமுக திராவிட மாடல் என்று சொல்கிறது. உண்மையில் இது மக்கள் நலம் இல்லாத மாடலாக உள்ளது. மின் இணைப்புகளை ஆதார் கார்டுகளுடன் இணைக்க வேண்டும் என்று மின்சார துறை அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே திமுகவினர் தேர்தல் அறிக்கையில் இரு மாதம் உள்ள மின் கட்டண கணக்கீட்டை மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையாக மாற்றப்படும் என. ஆனால், அவர்கள் இன்னும் அந்த திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. மேலும், ஆதார் இணைப்பால் நூறு யூனிட் மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளது.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 தருவதாகச் சொன்னார்கள். ஆனால், மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்து உள்ளனர். சட்ட ஒழுங்கும் மாநிலத்தில் மிக மோசமாக உள்ளது. அதிமுக அரசின் திட்டங்களை எல்லாம் தற்போது திமுக அரசு முடக்கி வைத்துள்ளது’’ என்றார் ஆவேசமாக!