நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், பெரம்பலூர் தொகுதி மிகவும் முக்கியத்தும் பெற்றிருக்கிறது, தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில்!

காரணம், இந்த முறை பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க.வின் மூத்த தலைவரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகனான அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில்தான் இவரை எதிர்த்து, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தரின் (பச்சமுத்து) மகன் ரவி பச்சமுத்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இருக்கிறாராம். கே.என்.நேருவுக்கு இணையான பண பலம், படை பலம், பத்திரிகை பலம் என அனைத்திலும் கே.என்.நேருவுக்கு ‘டஃப் பைட்’ கொடுப்பவர்தான் பாரிவேந்தர்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகன் ரவி பச்சமுவை களமிறக்க விரும்புகிறாராம் பாரிவேந்தர். எப்படியாவது பெரம்பலூர் தொகுதியில் அவரை நிற்க வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என வியூகம் வகுத்துள்ளாராம். இதனால்தான் பாஜக, அதிமுகவுடன் மிக நெருக்கமாக இருக்கிறாராம். அப்படி மகன் ஜெயித்து, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் மத்திய அமைச்சர் பதவிதான் டார்கெட் எனவும் கூறப்படுகிறது.

மேலும், பெரம்பலூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் ஏழை மாணவர்களை எனது கல்லூரியில் இலவசமாக பொறியியல் படிப்பை படிக்க வைக்கிறேன் என்ற வாக்குறுதியை கொடுத்தார் பாரிவேந்தர். அதே போல், சில நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறாராம். இந்த விஷயமெல்லாம் தேர்தலில் போட்டியிட்டால் தனது மகனின் வெற்றிக்கு உதவும் என கணக்குப் போட்டிருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, வெற்றி பெற்றால், ‘விட்டமின்களை’ இறக்கியாவது மகனை மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்திவிட வேண்டும் என கணக்குப் போட்டு வருகிறாராம் பாரிவேந்தர்!

அ.தி.மு.க.வில் பாரிவேந்தரின் கணக்கு இப்படி இருக்க, தி.மு.க.வில் கடந்த முறை பெரம்பலூர் தொகுதிக்கு துறையூர் ‘மெடிக்கல்’ முரளிதான் வேட்பாளர் என்பது உறுதியாகியிருந்தது. அமைச்சர் கே.என்.நேருவும், ‘போய் தொகுதியில் வேலையப் பாரு…’ என முரளிக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்தான், பச்சமுத்து திமுகவில் இணைந்து நேருவை சந்தித்தபோது, ‘பெரம்பலுர் தொகுதி உங்களுக்குத்தான்… உங்களை வெற்றி பெற வைப்பது என் பொறுப்பு’ என அடித்துக் கூறி வெற்றியும் பெறவைத்துவிட்டார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தவுடன் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டது. ‘அட… நம்ப மகனையே போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்திருக்கலாமே…’ என கே.என்.நேரு சிந்திக்க ஆரம்பித்துவிட்டாராம். ஏனென்றால், வெற்றி பெற வைத்த கே.என்.நேருவையை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார் பாரிவேந்தர்.

மேலும், எந்தவொரு பொறுப்பிலும் இல்லாமல் கட்சியினர் நிகழ்ச்சிகளில் அருண் நேரு கலந்து கொள்வதால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் ‘எம்.பி.’ என்ற அடைமொழியோடு கட்சியினரை சந்திக்க இருக்கிறாராம் அருண் நேரு! இதற்காக தற்போது துறையூரைச் சேர்ந்த ‘மெடிக்கல்’ முரளி, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் உள்ளிட்டோர் முழுமனதோடு களத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

அதே போல், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடவிருக்கும் ரவி பச்சமுத்துவை வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்று, உப்பிலியபுரம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அழகாபுரி செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆயத்தமாகி வருகிறார்களாம்!

சபாஷ்… சரியான போட்டி..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal