தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை முடித்திருக்கிறார்! அடுத்த ஒருவாரத்தில் மற்ற நிர்வாகிகள் நியமனமும் நிறைவறைய இருக்கிறது.

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதற்கடுத்து பொதுக்குழுவை கூட்டவும் ஓ.பி.எஸ். தயாராகி வருகிறாராம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் விரைவில் பொதுக்குழுவை நடத்த உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.

இந்நிலையில், பசுமை வழிச்சாலையில் அதிமுக தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை சந்திப்பேன். உறுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திப்பேன். பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா சந்தித்தேன். ஆனால், அரசியல் குறித்து பேசவில்லை’’ என ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்கும்போது ‘‘ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயம் சந்தித்து பேசுவேன்’’ என டிடிவி. தினகரன் கூறியிருந்த நிலையில் ஓபிஎஸ் இந்த பதிலை அளித்துள்ளார். அடுத்தடுத்து ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இருவரிடம் சுமூகமான போக்கு நிலவி வருவது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal