தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ… ஆனால், அக்கட்சியின் கொள்கைகள் அனைத்தும் அருமையாக இருக்கும். கல்வி விஷயத்தில் அவ்வப்போது அறிக்கை விடுத்துக்கொண்டிருப்பார் டாக்டர் ராமதாஸ்.
இந்த நிலையில்தான், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் ரோகன். கீழ்பூமி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் மாணவனின் தாய் சரண்யா 4 ஆண்டுகளாக அலுவலக கணக்காளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் இவருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் பள்ளியை விட்டு நின்றுவிட்டார்.
இதனைதொடர்ந்து இவருக்கு வழங்கப்படவேண்டிய சம்பள பாக்கியில் இருந்து தனது மகனுக்கு தேவையான கல்வி கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படி பள்ளி நிர்வாகமும் ரோகன் செலுத்தி வேண்டிய கல்வி கட்டணத்தை எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவனை காவலாளி வாசலிலேயே நிறுத்திவிட்டார்.
இதுகுறித்து கேட்டபோது கல்வி கட்டணம் செலுத்தாதால் உன்னை உள்ளே விடக்கூடாது என்று அறிவுரை வந்துள்ளது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்குள் நுழையவிடாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார். இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு மாணவனை வகுப்பறைக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
‘ஒரே நாடு… ஒரே திட்டம்…’ என கூறிக்கொண்டிருக்கும் மத்திய அரசு ‘ஒரே நாடு… ஒரே கல்வி’ என்ற கொள்கையை கொண்டுவருமா..? என எதிர்பார்க்கிறார்கள்.
அதே சமயம், தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிவாளம் போடவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!