அ.தி.மு.க. -பாரதிய ஜனதா கூட்டணி நீடித்தாலும் இரு கட்சிகளிடையேயும் உரசலும், சலசலப்பும் தொடங்கி இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
இதற்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக டெல்லி மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறார்கள். ஒற்றைத் தலைமை பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராததால் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜனதா தலைவர்களுடன் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக தன்னை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி விட்டார். மேலும் அ.தி.மு.க. என்றால் நான்தான். என்னிடம் தான் கட்சி ரீதியான தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார். இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகும் பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை.
இதனால் கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார். இதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அதன் தலைவர்கள் வரும் போதெல்லாம் சந்திக்க அவசியமில்லை. பிரதமர் மோடி வருகையின் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்க சென்றேன் என்றார். இந்த உரசல் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:- ‘‘அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே தி.மு.க.வை எதிர்க்க முடியும். எங்களுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் எந்த சிக்கலும் இதுவரை இல்லை. தேவையில்லாமல் நெருக்கடி கொடுத்தால் கூட்டணிதான் உடையும். எங்களை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் ஒரு பொருட்டே இல்லை. எங்கள் குறிக்கோள் 2026 சட்டசபை தேர்தல்தான். கழகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களையும், சோதனைகளையும் சந்தித்து விட்டது.
எனவே எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் வல்லமை கட்சிக்கு உண்டு. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் வலிமையான தலைவராக இருக்கிறார். எத்தகைய சவால்களையும் அவர் சந்திப்பார் என்றார்கள். கூட்டணியை பற்றி கவலை இல்லை என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார். அடுத்து பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறையை பொறுத்துதான் இந்த கூட்டணியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்’’ என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அதிரடியாக இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தல் பேசினோம்.
‘‘வருகிற நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நிலை ஏற்படும். அப்போது, அதிகாரம் ஓரளவு ஆளும் பா.ஜ.க.விடம் இருந்தாலும், முன்பு போல தேர்தல் ஆணையங்களுக்கு ‘உத்தரவு’ போட முடியாது! எனவே, இந்த நிலையில் கடைசி கட்டத்தில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரசுடன் கைகோர்க்க முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
ஏனென்றால், தமிழகத்தில் அதிக வாக்கு வங்கிகளை வைத்திருக்கிறது அ.தி.மு.க.! ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க. என்பதை பார்த்துதான் தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினர் ஓட்டு முழுவதுமாக தி.மு.க.விற்கு சென்றுவிடும் இந்தநிலையில்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் அண்ணன் எடப்பாடியார்’’ என்றனர்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகம் எந்தளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!