ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்து பேசினர். அப்போது ரிஷி சுனக்கிற்கு மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் இருவரும் சிரித்த முகத்துடன் கைக்குலுக்கி கலந்துரையாடினர்.

இந்த ஜி20 கூட்டமைப்பில் மொத்தம் 20 நாடுகள் உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்பட 20 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் அதிபர், பிரதமர் அல்லது அமைச்சர்கள் பங்கேற்பார்கள். அதன்படி இந்தோனேசியாவின் பாலி நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு இன்று துவங்கி நாளை வரை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றன.


இன்று காலை துவங்கிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் மாநாட்டில் அருகருகே இருக்கைகள் இருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனும், பிரதமர் நரேந்திர மோடியும் மரியாதை நிமித்தமாக கைக்குலுக்கி பேசி கொண்டனர். அதேபோல் பிற நாட்டின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பாலியில் நடக்கும் ஜி20 முதல் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசி கொண்டனர்” எனக்கூறி போட்டோவை வெளியிட்டுள்ளது. இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, செனகல் பிரதமரும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருமான மெக்கே சால் என்பவரையும் சந்தித்து பேசினார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‛‛ஆப்பிரிக்காவின் முக்கியமான வளர்ச்சி பங்காளியாக உள்ள மெக்கே ஷால் உடன் கலந்துரையாடப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Divya