தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார்!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் நடவு முடியும் தருவாயில், தொடர் மழை, பொருளாதார சூழ்நிலை ஆகிய காரணங்களால் அரசு குறிப்பிட்ட 15-ம் தேதிக்குள் ஏழை, எளிய விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்தது.

குறிப்பாக நடவு பணி முழுமையாக முடிந்த பிறகு, அடங்கல் நகல் பெற்று காப்பீடு செய்ய முடியும். இச்சூழலில் நவம்பர் 15-ம் தேதிக்குள் பருவ நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் குறிப்பிட்ட தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, விவசாயப் பணிகள் தடைபட்டு, பயிர் நடவிலும் பாதிக்கப்பட்டு, காப்பீடும் செய்ய இயலாத சூழலில் உள்ளதால் அனைத்து விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை இன்னும் நீட்டித்து தர வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal