வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக தமிழகத்திலேயே 122 ஆண்களுக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது.
இதன் காரணமாக சீர்காழி சுற்றுவட்டாரமே நீரில் மூழ்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதனால், டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் தண்ணீரில் முழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வை தொடங்கினார். கடலூர் கீழ்வாணிக்குப்பத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், மழை பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனையடுத்து, மழை கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.