‘பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்கள் அத்து மீறி மாநில உரிமைகளை பறிக்கின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம்’ என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறியிருக்கிறார்.

சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். அப்போது நிருபர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

‘‘தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். எங்களுக்கு அனுமதி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும். தற்போது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நேரத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal