தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களாகத்தான் மழையின் தாக்கமானது குறைந்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி வலுவடைந்து நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் வலுவாக தேவையான ஈரப்பதம், காற்றின் அழுத்தம் சாதகமான சூழலில் நிலவுவதால், இது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதே போல 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே வரும் நாட்களில் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.