மக்கள் நலனுக்காக அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் புகுந்தி டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். மூன்றாவதாக குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறார்!
இந்த நிலையில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியைச் சுருட்டுவதற்காக சுமார் 2 லட்சம் கட்டுமான பணியாளர்களைப் போலியாகப் பதிவு செய்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறியதாவது, “கட்டுமானத் தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் சுமார் 2 லட்சம் போலி கட்டுமானத் தொழிலாளர்களைப் பதிவு செய்துள்ளனர். கட்டுமான தொழிலாளர்களுக்குச் செயல்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக போலி பயனாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.3,000 கோடி அளவுக்கு நிதியைச் சுருட்ட ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2006 முதல் 13,13,309 பயனாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2018 முதல் 2021 வரை பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் விவரங்களில் 2 லட்சம் பயனாளர்களின் விவரங்கள் போலியாக உள்ளன.
கிட்டதட்ட 65 ஆயிரம் பேர் ஒரே தொலைபேசி எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 15,750 பேர் ஒரே குடியிருப்பு முகவரியையும், 4370 பேர் ஒரே நிரந்தர முகவரியையும் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது மிகப்பெரிய ஊழலாக உள்ளது. டெல்லியில் காற்றில் மட்டும் மாசு இல்லை. ஆட்சியிலும் மாசு இருக்கிறது. ஆம் ஆத்மி ஆட்சி ஊழல் ஆட்சியாக மலிந்துவருகிறது. இதுபோன்ற ஊழல் மூலம் திரட்டும் பணத்தை வைத்துதான் கட்சிக்கும், தேர்தலுக்கும் செலவிட்டு வருகிறார் கெஜ்ரிவால்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.