‘அரசியல் களத்தில் முத்திரை பதிப்பது அவ்வளவு எளிதல்ல! கரடு முரடான… மேடு பள்ளம் நிறைந்த… முட்களான பாதையில் சற்றும் தளராமல் பயணித்தால்தான் வெற்றி பெற முடியும்! அப்படி பயணித்துதான் நான் முத்திரை பதித்திருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இந்த வார்த்தையை அவ்வளவு எளிதில் யாருடம் கடந்துவிட முடியாது. இதற்கு முன்பு இவரது தந்தை முதலமைச்சராக இல்லை… ஏன் அமைச்சராகக்கூட இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அமைச்சராகி… முதலமைச்சராகி… ‘என்றைக்கு கவிழுமோ…?’ என்றிருந்த ஆட்சியை நான்கரை ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தினார்.

அதாவது, ஒருபக்கம் ஓ.பன்னீரின் குடைச்சல்… மறு பக்கம் சசிகலாவின் குடைச்சல்… இன்னொரு பக்கம் ‘மேலிடத்தின்’ ரெய்டு சோதனை… அடுத்து உள்கட்சியில் உள்ள குழப்பம் என அத்தனையையும் சமாளித்துதான் மீண்டும் ‘பவர் ஃபுல்’ எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார் அமர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க. இன்றைக்கு நான்காக உடைந்திருக்கிறது. இதனை தி.மு.க. தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. பி.ஜே.பி. மேலிடமோ, ‘அனைவரும் ஒன்றிணைந்தால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கும்’ என்று எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். இது பற்றி அவர்களிடம் பேசியபோது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கைப் பார்த்தால் பி.ஜே.பி. மேலிடமே அசந்து போய் விடும் என்கிறார்கள். இது பற்றி அவர்களிடம் பேசினோம்.

‘‘சார், ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஒருங்கிணைந்த அதிமுகவுடனே தாங்கள் கூட்டணி அமைக்க விரும்புவதாக பாஜக தலைமை தெளிவாகச் சொல்லிவிட்டது. மற்ற மூவரும் இதனை ஏற்றுக்கொண்டாலும், எடப்பாடி பழனிசாமி தான் முரண்டு பிடித்து வருகிறார். தனக்கு நெருக்கமான சிலரிடம் மட்டும் இது தொடர்பாக ஆழமாக ஆலோசித்துள்ளார் இபிஎஸ்.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வந்த பிறகு, அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்கும் வேகமாகப் பேசவில்லை. தனது ஆதரவாளர்களிடம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக பொதுவெளியில் விவாதம் ஆகும் அளவுக்கு எதும் விமர்சிக்க வேண்டாம், சசிகலா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும், இதை நாம் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆணையத்தை அமைத்ததே நாம் தான் என்பதால் இந்த அறிக்கைக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஒன்றும் பேச வேண்டாம். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலும் பாலிஷாக பேசிவிடுங்கள் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

சட்டப்பேரவை இருக்கை தொடர்பாக கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் பற்றி பெரிதாக எந்த விமர்சனமும் வைக்கவில்லை. பாஜகவின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பக்கம் சாய்ந்திருப்பதை அறிந்திருப்பதால், பாஜகவின் நகர்வுகளைக் கவனமாகப் பார்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன்படியே, ஓபிஎஸ் மீதான நேரடி அட்டாக்குகளையும் இபிஎஸ் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தியில், பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். 2024 தேர்தல் தொடர்பாக பாஜக என்ன முடிவில் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் விலாவாரியாகத் தெரிவித்திருக்கிறார். பாஜக தலைமை நீண்டகால நோக்கில் தான் அதிமுக விஷயத்திலும் தீர்வுகாண விரும்புகிறது, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுப்பதாகவும், உங்களை தவிர்ப்பதாகவும் நீங்கள் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என அவர் கூறியிருக்கிறார்.

நிறைய பிரச்சனைகள் நமக்கு சாதகமாக இருக்கின்றன. திமுக அரசை விமர்சிக்க நமக்கு நிறைய பாயிண்டுகள் இருக்கின்றன. இந்தச் சூழலை மட்டும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் 2024 தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்து விடலாம். அதற்கு, கட்டாயமாக நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் முடியும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறையே நாமும் செய்யக்கூடாது என நினைக்கிறது தலைமை என பக்குவமாகப் பேசியுள்ளார்.

அவரது பேச்சின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, அதற்குள் முழுமையாக எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் எனப் பட்டும் படாமல் கூறி அனுப்பி வைத்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணையும் முடிவு பற்றி பாஜக பிரதிநிதிக்கு ஈபிஎஸ் எந்த உத்தரவாதமும் சொல்லாமல் சந்திப்பை முடித்துக் கொண்டாராம்.

முன்பெல்லாம் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் ஆலோசனைகளின் போது ஓபிஎஸ், சசிகலா தரப்புக்கு எதிராக நிறைய விஷயங்கள் ஆலோசிக்கப்படும், ஆனால், சமீப நாட்களாக, தன்னைச் சந்திக்கும் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பற்றி பேச்செடுத்தால் கூட, விடுங்க பார்த்துக்கலாம் எனக் கூறி விவாதங்களைத் தவிர்த்து விடுகிறாராம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஓ.பி.எஸ். எடப்பாடி கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், சசிகலா எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது’’ என்றனர்.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி வேறுமாதிரி ஒரு கணக்கைப் போட்டு வருகிறாராம். குஜராத் தேர்தல் முடிவுகள் வரட்டும். அதன் பிறகு கூட்டணி அமைப்பது, ஓ.பி.எஸ்., சசிகலாவுடன் இணைவது பற்றி பேசிக்கொள்ளலாம் என்கிறாராம். அதாவது குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. அமோகமாக வெற்றி பெற்றால், ‘இணைந்து’ போட்டியிடலாம்… , ‘வேறு மாதிரி’ ரிசல்ட் வந்தால், தமிழகத்தில் நாம் தனித்து போட்டியிட்டாலும், 25 இடங்களுக்கு மேல் நம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal