திசையன் விளை தாலுகா அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட கல்வெட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனயாக அகற்றினர்!

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.

அதன்படி புதிய எல்லைகளுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கியது. அங்கு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் கல்வெட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகில் ரூ.3 கோடி செலவில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு தாலுகா அலுவலக கட்டிடமும் அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது.

அந்த தாலுகா அலுவலக கட்டிடத்தை சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று இரவு அந்த கட்டிடத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டை யாரோ பதித்து சென்றுள்ளனர். இன்று காலை அந்த கல்வெட்டை பார்த்து சென்றவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கல்வெட்டை அங்கிருந்து அகற்றினர். இதற்கிடையே இரவோடு இரவாக அந்த கல்வெட்டை அங்கு கொண்டு வந்து வைத்தது யார்? என திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal