தனது நண்பரின் மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கிய கயவனை போலீசார் கைது செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காடு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்துவருகிறார். இந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகக் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக சிறுமியின் பெரியம்மா சிறுமியை அருகிலுள்ள திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், இது குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் தன் தந்தையின் நண்பர் ராமையா (50) என்பவர், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன, சிறுமியின் பெற்றோர் இந்தச் சம்பவம் குறித்து, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். புகாரையடுத்து, வழக்கு பதிவுசெய்த போலீஸார் ராமையாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் ராமையாவை, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்தனர். 50 வயது முதியவர் ஒருவர் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.