அரசியல் முட்கள் நிறைந்த பாதை, அதில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது அது எனக்கு கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளையை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘சினிமா துறையில் தற்போது அரசியல் கலந்து வருகிறது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் ஏழைகளுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தனர். திரையுலகிற்கும் அதிமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
என்னவென்றால் இரண்டு தலைவர்களும் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள். அது எந்த கட்சிக்குமே கிடைக்காது. எங்கள் இயக்கத்தை தோற்றி வித்தவர்களே இந்த கலைத்துறையை சேர்ந்தவர்கள் தான். புரட்சித் தலைவர் காலம் முதல் திரையுலகிற்கு பல்வேறு நன்மைகளை அதிமுக செய்துள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் இரு பெரும் தலைவர்களும் திரைத்துறையில் தோன்றி, வளர்ந்து மக்கள் இடத்திலேயே செல்வாக்கை பெற்று நாட்டை ஆண்டவர்கள்.
சினிமா துறையில் நுழைவது எவ்வளவு கடினமோ, அதேபோன்று தான் அரசியலில் நுழைவது கடினம். திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால், அரசியலில் அப்படி இல்லை. ஒவ்வொரு படியாக ஏறி தான் இந்த நிலைக்கு வர முடியும். அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது, அது எனக்கு கிடைத்துள்ளது. அரசியலில் ஜொலிப்பது கடினம். அரசியல் முட்கள் நிறைந்த பாதை’’ என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதாவது, முட்கள் நிறைந்த பாதையில் தான் முத்திரை பதித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது!