அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதால், அவரது அமைச்சர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2002-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ‘‘ஆட்சி மாறிவிட்டதால், நீதிமன்ற விசாரணையை மாற்ற முடியுமா? ஏன் இந்தப் போக்கு தொடர்கிறது’’ என காட்டமாக கேள்வி எழுப்பினர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடியாக இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறது.

தமிழக மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் அனிதா ராதாகிருஷ்ணன். அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2002- &2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. இந்நிலையில் தனக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த மனு நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்,‘‘ லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோருவது என்பது ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் தொடங்கும் ஒரு வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கட்சியினர் தங்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இது விசித்திரமான நடைமுறையாக உள்ளது.

இந்த நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறது. ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாறவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆட்சிக்கும் இதுபோன்ற வழக்கு விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாறிவிட்ட காரணத்தால், வழக்கு விசாரணையையும், நீதிமன்ற விசாரணையையும் மாற்ற முடியுமா?’’ என கேள்வி எழுப்பினர்.

‘‘அரசு அலுவலகத்தை உங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்த முடியாது. உங்கள் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் தயங்கலாம். ஆனால், ஆட்சி மாறிவிட்டதால், அரசு இயந்திரத்தின் இயக்கம் மாறிவிடாது. ஆட்சிக்கும் அரசு இயந்திரத்தின் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்’’ என நீதிபதிகள் கண்டிப்போடு தெரிவித்தனர்.
மேலும், மேற்கொண்டு இந்த விவகாரத்தில் கூற எதுவும் இல்லை என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. மனுவை திரும்பப் பெற அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்த செல்வகணபதி மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கில் (தி.மு.க.வில் இருக்கும் போது தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது) அவரது அரசியல் எதிர்காலமே காணாமல் போய்விட்டது. அதே நிலைமை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டுவிடுமோ என்று அவரது ஆதரவாளர்கள் பதற்றத்தில் உள்ளனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal