பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் எப்பாடியாவது தாமரையை மலரச் செய்ய வேண்டும் என பல்வேறு வழிகளில் காய்நகர்த்தி வருகிறது டெல்லி மேலிடம். அதற்காக எந்தவொரு ‘தியாகத்தையும்’ செய்யத் தயாராக இருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவு, இந்த தேர்தல் இரண்டுகட்டமாக நடக்கிறது. கடந்தாண்டு தமிழகத்தைப் போலவே, அங்கும் பலமுனைப் போட்டி நிலவுகிறது.

தற்போது மத்திய அரசின் செயல்பாடுகளால் பாஜகவுக்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்திருந்தாலும் அது காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவில்லையென அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஆம் ஆத்மி உருவாக வாய்ப்பிருக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அம்மாநில தேர்தல் அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியிலிருந்த பாஜக 2017ம் ஆண்டு சட்டப்பேரவையை பதற்றத்துடன்தான் எதிர்கொண்டபோது. ஏனெனில் ஜஎஸ்டி, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் அப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் வென்றது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க 92 தொகுதிகளை கைப்பற்றினால் போதுமானது. இந்த தேர்தல் முடிவுகள் சில விஷயங்களை அம்பலப்படுத்தியது.

கடந்த 1995ம் ஆண்டிருந்து குஜராத்தில் வெற்றி பெற்று வந்த பாஜக இந்த தேர்தலில்தான் மிக மோசமாக வாக்குகளை இழந்திருக்கிறது என்பது. அடுத்து, 1985ம் ஆண்டிருந்து கணக்கிட்டு பார்த்தால் காங்கிரஸ் தற்போது வீரியமாக மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த விஷயங்கள் பாஜகவுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்நிலையில், தற்போது காங்கிரசுக்கு சவாலாக ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. இதை பாஜகவுக்கு எதிரியாக காங்கிரஸ் கருதவில்லை.

ஆம் ஆத்மியை பொறுத்த அளவில் கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 29 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சூரத் மற்றும் காந்திநகரை அக்கட்சி கைப்பற்றியது. தற்போது வரை இலவசங்கள் கூடாது என்று பாஜக விமர்சித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி இலவசங்களை சரமாரியாக அறிவித்து வருகிறது. எனவே மாநிலத்தில் நிச்சயம் மும்முனை போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

தற்போது மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவமும் தேர்தல் பிரசாரங்களில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதேபோல முன்னதாக தேர்தல் நேரத்தில் மேற்கு வங்கத்தில் பாலம் ஒன்று இடிந்த விழுந்தது. இதனை பிரதமர் மோடி அரசியலாக்கினார். எனவே குஜராத் தேர்தல் பிரசாரங்களில் மோர்பி பாலம் விபத்து அரசியலாக்கப்படும். மற்றொருபுறத்தில் மாற்றத்தின் முகமாக அறியப்பட்ட ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாக்கூர் ஆகியோர் 2017 தேர்தலுக்கு பிறகு ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாக்கூர் பாஜகவிலும், ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸிலும் சேர்ந்துவிட்டனர். எனவே இரு கட்சிகளுக்கும் கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது.

இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த 2002ல் மோடி முதலமைச்சராக இருந்தபோது 127 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதே போல தற்போது வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. ஏனெனில், மற்ற மாநிலங்களில் ‘குஜராத் மாடலை’ காட்டிதான் வாக்குகளை கவர கட்சி முயன்று வருகிறது. எனவே குஜராத்திலேயே தோல்வி எனில் எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கட்சிக்கு பெரிய சறுக்கல் ஏற்படும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனால் ஆம் ஆத்மி 108 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஜிஎஸ்டி, வேலையில்லா திண்டாட்டம், மதக் கலவரங்கள் ஆகியவை இல்லாத சூழலையே குஜராத் மக்கள் விரும்புகின்றனர். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றிக்கு முன்னோட்டம் குஜராத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பஞ்சாக்பை போல் எளிதாக ஆம் ஆத்மியால் குஜராத்தில் வெற்றி பெற்றுவிட முடியாது. காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசல், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்டவை அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, கடைசி கட்டத்தில் மீண்டும் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் சூழலே தற்போதைய நிலவரமாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal