குளிர்பானத்தில் விஷம் கலந்து கேரள காதலனை கொலை செய்த கிரீஷ்மா வழக்கு தமிழக காவல்துறைக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார். இவருக்கும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிரீஷ்மாவும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் பணக்கார மாப்பிள்ளை ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதில் கிரீஷ்மாவுக்கு முதல் திருமணம் நிலைக்காது என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதை கிரீஷ்மாவிடம் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே ஷாரோன் ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசி திருமணம் செய்து கொண்டார் கிரீஷ்மா. இதையடுத்து அவருக்கு மெல்ல கொல்லும் விஷத்தையும் கொடுத்து கொலை செய்துள்ளார்.

மேலும் விசாரணையில் கிரீஷ்மா ஜாதகத்திற்காக ஷாரோனை கொல்லவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. கிரீஷ்மாவுக்கு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாகவும், ஆனால் ஷாரோன் ராஜுடன் ஊர் சுற்றியதால் அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களால் தனது திருமணத்தில் பிரச்னை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் கிரீஷ்மா, ஷாரோனின் போனில் உள்ள புகைப்படங்களை அழித்துவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஷாரோன் மறுத்துள்ளார். இதனால்தான் இந்த கொலை நடந்ததாக கிரீஷ்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாறசாலை போலீசார் ஆரம்பத்திலேயே இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டவில்லை என ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயராஜ் கூறுகையில், “சந்தேகத்துக்கு இடமாக ஏதோ ஒன்று காதலி வீட்டில் வைத்து கொடுத்திருப்பதாக நாங்கள் போலீசாரிடம் தெரிவித்தோம். அவர்கள் கிரீஷ்மாவின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தவோ, அவரது அம்மாவிடம் விசாரணை நடத்தவோ, ஷாரோனுக்கு விஷம் கொடுத்த பாட்டிலை எடுக்கவோ இல்லை’’ என்றார்.

பாட்டிலை ஆற்றங்கரையில் போட்டதாக கிரீஷ்மா சொன்னதையே எங்களிடமும் கூறினார்கள். அதுபோல கிரீஷ்மா வீட்டில் ஷாரோன் வாந்தி எடுத்த பகுதியை ஆய்வு செய்யவில்லை. கிரீஷ்மாவிடம் ஆரம்பத்திலேயே தீவிரமாக விசாரித்திருந்தால் பூச்சிமருந்து கொடுத்தது தெரிய வந்திருக்கும். அதன்மூலம் அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளித்து ஷாரோன் ராஜை காப்பாற்றியிருக்கலாம்.

கிரீஷ்மாவின் போனை கைப்பற்றி ஆய்வு செய்திருந்தால் ஸ்லோ பாய்சன் குறித்து கிரீஷ்மா இணையதளத்தில் தேடியதை முன்கூட்டியே கண்டறிந்திருக்கலாம். கிரீஷ்மா கூகுள் ஹிஸ்டரியில் அதை டெலிட் செய்திருந்த பின்னர்தான் சைபர் செல் உதவியுடன் குற்றப்பிரிவு போலீஸார் கண்டறிந்திருந்தனர். மொத்தத்தில் பாறசாலை போலீஸார் இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே விசாரணையில் முழுமனதோடு ஈடுபடவில்லை என குற்றச்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஷாரோனின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளுக்கு பாறசாலை போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி கேரள போலீஸார் கூறுகையில், “ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது கடந்த மாதம் 14-ம் தேதியே நடந்துவிட்டது. அதுபற்றி அவரது குடும்பத்தினர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 20-ம் தேதி சந்தேகத்துக்கு இடமான வகையில் விஷம் உடலுக்குள் சென்ற நிலையில் இளைஞர் ஒருவரை அட்மிட் செய்திருப்பதாக இண்டிமேசன் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுத்ததால், கடந்த 21-ம் தேதி மாஜிஸ்திரேட் ரகசிய வாக்குமூலம் பெற்றார்.

ரகசிய வாக்குமூலத்தில் கிரீஷ்மாவுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமாக எதுவும் ஷாரோன் சொல்லவில்லை. அதன் பிறகு விசாரணைக்கு வரும்படி ஷாரோன் ராஜின் குடும்பத்தினரை மூன்று முறை அழைத்தும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, புகாரும் தரவில்லை. கடந்த 25-ம் தேதி ஷாரோன்ராஜ் இறந்த பிறகுதான் புகார் அளித்தனர். குற்றவாளிகளை பிடித்து உடனடியாக தூக்கில் போட வேண்டும் என ஷாரோனின் வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர். நாங்கள் சட்டப்படிதானே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றனர்.

இறந்த ஷாரோன்ராஜின் வீடு இருக்கும் பாறசாலை பகுதி கேரள மாநிலத்தில் உள்ளது. ஷாரோனுக்கு கஷாயத்தில் பூச்சிமருந்து கலந்துகொடுத்த கிரீஷ்மாவின் வீடு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூச்சிமருந்து கலந்துகொடுத்த கிரீஷ்மாவின் வீடு பளுகல் காவல்நிலைய லிமிட்டுக்குள் வருகிறது. குற்றம் நடைபெற்றது பளுகல் காவல்நிலைய எல்லைக்குள் வருவதால் விரைவில் இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரணை நடத்திவிட்டு அனைத்தையும் முழு அறிக்கையாக தயாரித்து தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்க கேரள போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal