திமுக நிர்வாகி சைதை சாதிக் அவதூறாக பேசியது பற்றி டெல்லி உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜகவின் குஷ்பு புகார் அளித்துள்ளார்.

சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘‘நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பொது மேடையில் பெண்களைப் பற்றி அசிங்கமாக பேச மாட்டார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் உறுதி அளித்திருக்கிறது’’ கூறினார்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுக் கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் பேசுகையில், பாஜகவில் அங்கம் வகிக்கும் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்தார். இதுதொடர்பான வீடியோ பொது வெளியில் வைரலானது. அமைச்சர் மனோ தங்கராஜ் இருக்கும்போதே சைதை சாதிக் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நடிகை குஷ்புவுக்கு போன் செய்த சைதை சாதிக் அவரிடம் மன்னிப்பும் கேட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி குஷ்பு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தன் மீதான அவதூறு பேச்சு குறித்து திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் அளித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal