மேற்கு வங்க முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது, ‘அரசியல் ரீதியானது கிடையாது… மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என இருவரும் விளக்கியுள்ளனர்!
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த மம்தா பானர்ஜி, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
மம்தா பானர்ஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் வாசலுக்கு வந்து பொன் ஆடை அணிவித்து வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘கடந்த முறை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழ்நாடு வந்தபோது, முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறந்து வைத்தார். மேற்கு வங்க மாநிலத்திற்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று தமக்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அழைப்பை நானும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தேர்தலுக்கான சந்திப்பு இல்ல. அரசியல் குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை’’ என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் திமுக தொடர்ந்து வரும் நிலையில், மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பை காங்கிரஸ் கட்சியினர் உற்று நோக்கியிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பேட்டி அனைத்து விவகாரங்களையும் தௌவுபடுத்தியுள்ளது.