கொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தல் தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது என்பது விலகாத மர்மமாகவே இன்னும் உள்ளது.

இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனால், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தமாக மறுபுலன் விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை புத்துயிர் பெற்று மீண்டும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வழக்கை கடந்த மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணைநடத்திய நிலையில், அதுதொடர்பான வாக்குமூலம், விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான கொடநாடு வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி குழுவில், ஐ.ஜி., தேன்மொழி, கூடுதல் எஸ்.பி., முருகவேல், டி.எஸ்.பி.,க்கள் அண்ணாதுரை, சந்திரசேகரன், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்று உள்ளனர். இக்குழுவினர், கடந்த சில் தினங்களுக்கு முன்னர் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர், எஸ்டேட்டின் மேலாளர் நடராஜ், பணியாளர்கள், சம்பவம் நடந்த தினத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கின் 1,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி மாதவன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி முருகவேல், சந்திர சேகர், அண்ணாதுரை, வினோத் உள்ளிட்ட 3 டிஎஸ்பிக்கள், ஒரு ஆய்வாளர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம், வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது. இதேபோல், மேலும் பல தடயங்களை அழிக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளதையும் சிபிசிஐடி போலீசார் கண்டறிந்துள்ளதாகவும் தெரிகிறது. தனிப்படை விசாரித்தது போலவே சிபிசிஐடி போலீசாரும் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்து, தற்போது நேபாளத்தில் வசித்து வரும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் நேபாளம் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டு ஜாமினில் உள்ள, 12 பேரிடமும் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், “காவலாளி ஓம்பகதூர் உடலை தலைகீழாக கட்டிவைத்திருந்த மரத்தை வெட்டி, அகற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று நடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal