போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ளது.

தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.

ஆனால் சைபர் கிரைம் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்தது. செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சென்னை எம்.பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மூன்று வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal