மாடல் அழகியுடன் இருந்ததை தனது மனைவி பார்த்ததால், அவரை காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சினிமா தயாரிப்பாளரை மும்பையில் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா, அவரது மனைவியான நடிகை யாஸ்மின் மிஸ்ராவுடன் (35) வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாடல் அழகியுடன் தனது கணவர் கமல் கிஷோர் மிஸ்ரா, குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் பேசிக் கொண்டிருந்ததை யாஸ்மின் பார்த்தார்.
அதிர்ச்சியடைந்த அவர் மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதை பார்த்த கமல் கிஷோர் மிஸ்ரா, அங்கிருந்து காரில் தப்பி செல்ல முயன்றார். ஆத்திரமடைந்த யாஸ்மின், அவரை காரில் அங்கிருந்து செல்ல விடாமல் மறித்தார். இருந்தும், மனைவி என்று கூட பாராமல் யாஸ்மின் மீது காரை ஏற்றி அவரை இடித்து தள்ளினார். இந்த சம்பவத்தில் யாஸ்மின் மீது காரின் முன்பக்க டயர் ஏறி இறங்கியது. இதனால் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த காவலாளி ஒருவர் யாஸ்மினை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
இத்தனை சம்பவத்திற்கும் மத்தியில், கமல் கிஷோர் மிஸ்ரா அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த நிலையில் தன் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கணவர் கமல் கிஷோர் மிஸ்ரா மீது மும்பை அம்போலி போலீசில் யாஸ்மின் புகார் கொடுத்தார். அதையடுத்து கமல் கிஷோர் மிஸ்ரா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே நேற்றிரவு போலீசார் கமல் கிஷோர் மிஸ்ராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.