தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. இந்த மாதத்தில் முதல் 15 நாட்கள் மிக தீவிரமாக மழை பெய்தது.

மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி நீர் வெளியேற்றப்பட்டது,

இந்த மாத தொடக்கத்தில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 லட்சம் கனஅடியாக இருந்தது. ஒகேனக்கலில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரியில் கடைமடை வரை நீர் வரத்து இருந்தது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. சென்னையில் தீபாவளிக்கு முன்பு வரை தினமும் மாலை தீவிரமாக மழை பெய்தது.

நாளையில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நாளை பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி,புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. நாளை மறுநாளும் இதே மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal