பெண்களின் கண்ணியம், சுயமரியாதைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., துணை நிற்கிறார் என்று குஷ்பு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவை சேர்ந்த நடிகைகள், குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. தி.மு.க. இதை பொறுத்துக்கொள்ளாது. இதற்காக எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ‘‘மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்’’ இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆரோக்கியமான அரசியலை நோக்கி தமிழகம் பயணித்துக்கொண்டிருக்கிறது..!