இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு புதிய அபாரத் தொகை விதித்திருப்பதை, போக்குவரத்து காவல்துறையின் தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் த.மா.கா. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார்.
அதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய ஜி.கே.வாசன், ‘‘சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. கொரோனா தாக்கத்தை விட தமிழக அரசின் இது போன்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் அடுத்த தெருவுக்குப் போகும் வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் வாங்குவது நியாயம் அல்ல. காவல்துறை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. அபராத தொகை செலுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார்.