காங்கிரஸ் கட்சியில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நேற்று காலையில் பதவி ஏற்றார். இதற்கான ஒப்புதல், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கிற கட்சி மாநாட்டில் அளிக்கப்படும்; அதன்பின்னரே கட்சியின் காரியக்கமிட்டி அமைக்கப்படும் எனவும், அதுவரையில் காரியக்கமிட்டி போல செயல்படுவதற்கு வழிகாட்டும் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் நேற்று காலையில் தகவல்கள் வெளியாகின. மாலையில் 47 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
அந்த குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மூத்த தலைவர்களான ஏ.கே. அந்தோணி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ஹரிஷ் ராவத், அபிஷேக் சிங்வி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டவர்களும் வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து ப.சிதம்பரம், டாக்டர் ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகிய 3 பேரும் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் கார்கேவுடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேரளாவை சேர்ந்த சசி தரூருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.