கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அத்துடன் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் (பால்ராஸ்), ஆணிகள் உள்ளிட்டவை கிடந்தன. முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடம் முகமது தல்கா (வயது 25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரான அப்சர்கானை போலீசார் கைது செய்தனர். கார் வெடிப்பில் கைது தொடர்வதால் கோவையில் மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது!